RSS Feed

தோனி: வெற்றி நாயகன்

February 12, 2012 by Suraj

தோனி – படத்தின் பெயரை மட்டும் விளையாட்டுத் தனமாக வைத்துவிட்டு படம் முழுக்க நமது கல்வி முறையை கடுமையாகச் சாடியிருக்கிரார்கள். மகேஷ் மன்ஜரேகரின் மராட்டிய படமான ‘சிக்க்ஷநக்ஷய ஆய்ச்சா க்ஹோ’ வின் தழுவலே இப்படம். ஆனால் பிரகாஷ் ராஜ் மற்றும் ஞானவேல் தங்களது திரைக்கதை மூலமாக படத்தை ஓர் உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டனர். இன்று நம் நாட்டில் கல்வி முறையால் பாதிக்கப்பட்டும், கல்வியை காரணமாக காட்டியும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதையும் தினம் தினம் செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் நம்மில் பலர் இச்செய்திகளை பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டு சும்மா இருந்து விடுகிறோம். இவ்வாறு நடைபெறும் ஓவ்வொரு தற்கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களையும் அதனால் எப்படி ஒரு தலைமுறையும் சமூகமும் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் வக்கிரமாக தோலுரித்துக் காட்டுகிறது இத்திரைப்படம்.


நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் (பிரகாஷ் ராஜ்), அம்மா இல்லாத தனது இரண்டு குழந்தைகளையும் அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கிறார். தனது சக்தியையும் மீறி பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவரது மகனையும் மகளையும் படிக்க வைக்கிறார். இதற்காக அலுவலகத்தில் overtime ஆக வேலை பார்க்கிறார், தெருவில் பார்பவர்களிடம் எல்லாம் வித விதமாக ஊறுகாய் விற்றுத் திரிந்து அவமானப்படுகிறார், வட்டிக்கு கடன் வாங்கி அல்லோலப்படுகிறார். ஆனால் அவரது மகன் கார்த்திக்கு சுட்டுப் போட்டாலும் படிப்பு வரவில்லை. இந்தியாவின் எண்ணற்ற இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை போல கார்த்திக்கும் கிரிக்கெட் பைத்தியம் பிடித்து திரிகிறான், கிரிக்கெட்டுடனே வாழ்கிறான். அவன் சிறந்த கிரிக்கெட் வீரனாக வருவான் என்று அவனது பயிற்சியாளர் நாசர் நம்பிக்கையுடன் இருக்க, பிரகாஷ் ராஜோ அவனுடைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை காரணம் காட்டி கிரிக்கெட் பயிற்சியை நிறுத்தி விடுகிறார். அத்துடன் நிற்காமல் அனைத்து பாடங்களுக்கும் tuitionனும் சேர்த்து 24 மணி நேரமும் படிக்கும் படி கட்டாயப் படுத்துகிறார். இதனால் மனம் வெறுத்து கார்த்திக்கு படிப்பின் மேல் இருந்த கொஞ்ச நஞ்சம் நாட்டமும் இல்லாமல் போகிறது. மதிப்பெண்கள் குறையவே பள்ளியில் அவனை பத்தாம் வகுப்புக்கு அனுப்ப முடியாதென்றும் தங்கள் பள்ளிக்கு 100% தேர்ச்சியே முக்கியம் என்றும் சொல்லி விடுகிறார்கள். வேண்டும் என்றால் ஒன்பதாம் வகுப்பிலேயே மீண்டும் படிக்கலாம் என்று சொல்ல பிரகாஷ் ராஜ் பள்ளி முதல்வரிடம் தனது பையனை நன்றாக படிக்க வைப்பதாகவும் அவனை எப்பாடு பட்டாவது தேர்ச்சி பெற வைப்பதாகவும் கெஞ்சிக் கதறி ஒப்புக்கொள்ள வைக்கிறார். இன்று தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பள்ளிகளின் மிகவும் கசப்பான மற்றும் வருந்தத்தக்க நிலைமை இது.

பையன் கிரிக்கெட்டை மறந்து படிக்க வேண்டும் என்பதால் அவனது கிரிக்கெட் மட்டையை அவனது கண் முன்னரே அடித்து உடைக்கிறார் பிரகாஷ் ராஜ். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரகாஷ் ராஜ் தனது மகனை அடித்து விட அவன் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு செல்கிறான். மகனின் இந்த நிலைக்கு நாம் தான் காரணம் என்று எண்ணி வருந்தும் பிரகாஷ் ராஜ் பின்னர் மனம் திருந்தி, நம் நாட்டில் இன்று இருக்கும் கல்வி முறைக்கு எதிராகவும் அதை ஆட்டிப்படைக்கும் பண முதலைகளுக்கு எதிராகவும் போராடுகிறார். சராசரி நடுத்தர வர்க்கத்து பெற்றோர்களை அப்படியே அச்சு அசலாக பிரதிபலிக்கிறார் பிரகாஷ் ராஜ். படம் பார்க்க வரும் பெற்றோர்கள் திரையில் தங்களையே பார்ப்பதை போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அசாத்தியமான நடிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார். கண்டிப்பாக பல விருதுகள் காத்திருக்கின்றன. 17*8 எவ்வளவு என்று அவர் பள்ளி முதல்வரிடம் இருந்து மாநில முதல்வர் வரை அனைவரையும் கேட்டு திணறடிக்கும் போது திரையரங்கில் பலத்த கரகோஷங்களுனுடன் விசில் சத்தமும் பறக்கிறது. பஞ்ச் வசனங்களுக்கும் , peppy songs களுக்கும் மட்டுமே கைதட்டி விசில் அடித்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகன், இம்மாதிரியான சிந்திக்க வைக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் அதே விதமான வரவேற்பு தருவதைப் பார்க்கும் பொழுது தமிழ் திரையுலகின் இன்றைய ஆரோக்கியமான சூழல் வெளிப்படுகிறது.

‘King of Re-recording’ என அழைக்கப்படும் இசைஞானி இளையராஜாவின் இசை மனதை வருடுகிறது. குறிப்பாக பிரபு தேவா வரும் ‘வாங்கும் பணத்துக்கும்’ பாடல் எண்பதுகளின் இளையராஜாவை நமக்கு நினைவூட்டுகின்றது. படம் நம்முள் பாதிப்பை ஏற்படுத்த பின்னணி இசை மிகவும் உதவி இருக்கிறது. வசனங்கள் கூர்மையாக செதுக்கப்பட்டு சாட்டையடி போல் நம் மனதில் பதிகின்றன. சரியான தருணங்களில் நகைச்சுவை உணர்வை தூண்டவும் தவறவில்லை. K.V. குகனின் ஒளிப்பதிவில் குறை ஏதும் கண்டுபிடிக்க இயலவில்லை. சிறுவர்களாக நடிக்கும் ஆகாஷ் மற்றும் ஸ்ரீ தேஜா, காலனியில் வசிக்கும் பெண்ணாக வரும் ராதிகா அப்டே, மருத்துவராக வரும் தலைவாசல் விஜய், சரத் பாபு, பிரகாஷ் ராஜின் காலனி நண்பர்கள் என அனைவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் ரௌடியாக வரும் முரளி ஷர்மா திடீரென மனம் திருந்தி நல்லவனாக மாறுவதாக காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்திருக்கிறார்கள். பல காட்சிகளை தெலுங்கில் மட்டும் எடுத்து விட்டு தமிழில் dub செய்திருக்கிறார்கள். Close up காட்சிகளை மட்டுமே தமிழில் தனியாக எடுத்திருக்கிறார்கள். இது பல நேரங்களில் dubbing படம் பார்ப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. கடைசி காட்சியில் சிறுவன் கார்த்திக் சிக்ஸர் அடிப்பதைப் பார்த்தால் ஐந்து வயது சிறுவன் முதல் எண்பது வயது தாத்தா வரை அனைத்து வயது கிரிக்கெட் ரசிகர்களும் சிரித்து விடுவார்கள் . புல்லரிக்க வேண்டிய காட்சி புஸ்வானமாக ஆகி விடுகிறது. இந்த காட்சியை இன்னும் சிறப்பாக படமாக்கியிருக்கலாம். பிரம்மானந்தத்தின் காமெடி  தெலுங்கு ரசிகர்களை வேண்டுமானால் சிரிக்க வைக்கலாம். தமிழ் ரசிகர்களிடம் எடுபடாது.

தங்களது பிள்ளைகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மட்டுமே பார்க்கும் இன்றைய பெற்றோர்களின் தவறான மனப்போக்கை கண்டித்தும் அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும் இது போன்ற சவாலான கதையை திரைப்படமாக தந்ததமைக்காக பிரகாஷ் ராஜ் கண்டிப்பாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். கிரிக்கெட் வீரர் தோனி மட்டும் ஒரு வெற்றி நாயகர் அல்ல அவரது பெயரைக் கொண்ட இத்திரைப்படமும் ஒரு வெற்றித் திரைப்படம்  தான்.

[rating: 1]


1 Comment »

Leave a Reply

Your email address will not be published.