RSS Feed

2012: தமிழ் சினிமாவும் 120 ரூபாயும்

December 23, 2012 by Guest Author

 

மொக்கபடம்” வாசகர்களுக்கு ஒரு பெரிய வணக்கம்

என்ன டைட்டில் காப்பினு நினைகிறிங்களா, அவன் அவன் படத்தையே காப்பி அடிக்கிறான் டைட்டில் தானே, ப்ரீயா விடுங்க

இந்த பதிவேடுல , இந்த வருஷம், அதாவது 2012ல வந்த படங்கள்ல ஏதேது தியேட்டர்ல செம்மயா ஒடிச்சு, ஏதேது தியேட்டர் தியேட்டரா ஒடிச்சு , ஏதேது தியேட்டர்ல இருந்து ஆடியன்ச ஓட வச்சுருக்குனு பாக்கப்போறோம். இதெல்லாம் சொல்றதுக்கு யாரா நீ? அப்படினு பிரகாஷ்ராஜ்க்கு BP(!) வந்த மாதிரி நிறைய பேர் கத்துறது எனக்கு இங்க வரைக்கும் கேக்குது. நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லிங்க. Advance booking பண்ணாம, அங்க இங்க காச தேத்தி, கஷ்டப்பட்டு லைன்ல நின்னு டிக்கெட் வாங்கி, “சுவிஈ…” னு விசில் அடிச்சுட்டே first day first show பாக்குற ஒரு சாதாரண தமிழ் குடிமகன். இந்த கட்டுரைல நான் சொல்லப்போவதெல்லாம் என்னுடைய பார்வையில் இருந்து மட்டுமே.

இந்த வருஷம், இந்த தேதி வர மொத்தம் 139 படங்கள் வந்துருக்கு (Wikipedia துணை). இந்த 139 படங்கள்ல, “படம் செம்மயா இருக்கும் மச்சி”னு போய் மொக்க வாங்குன படங்கள் நிறைய இருந்தாலும், “கண்டிப்பா மொக்கையா தான் மச்சி இருக்கும்”னு போய் ‘வாவ்’னு வாய்ல வாட்டர்பாக்கெட் வச்ச மாதிரி வியந்து பார்த்த படங்களும் கொஞ்சம் வந்திருக்கறது ஆறுதல் தர்ற விஷயம். Wikipediaவ உத்து பாத்ததுல ஒரு விஷயம் புரியுது. மாசத்துக்கு ஒரு படம் நல்லா வந்துருக்கு, ரொம்ப எதிர் பார்த்த படம் ஒண்ணு ஏன்டா வந்துச்சுனு இருக்கு.

ஜனவரி

கெத்து :

“நண்பன்”. விஜய், இல்லியானா, சத்தியராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த்னு பெரிய நட்சத்திரங்கள் நடிச்சு, 55 கோடியில் சங்கர் இயக்கத்தில் வந்த படம். இவ்வளோ பெரிய நட்சத்திரகூட்டத்தின் நடுல ஹாரிஸ் ஜெயராஜ் எப்படி போயிருப்பாருனு அவருக்கே தெரியாது. மொத்தமா பார்த்தா, படம், எதிர்பார்புகளுடன் வந்த ஆடியன்சை ஏமாற்றவில்லை. இந்த வருடத்துக்கு விஜய் கொடுத்த நல்ல ஆரம்பம்.

நண்பன்” (Nanban): காப்பி அடிச்சாலும் நண்பன், நண்பன் தான்.

வெத்து:

“வேட்டை”. மாதவன், ஆர்யா, அமலா, சமீரானு பெரிய ஆட்களுடன் பெரிதாக பேசப்பட்டப படம். பத்து வருஷம் முன்னாடி இந்த படம் வந்துருந்தா, செம்ம ஹிட் ஆயிருக்கும். You are late Lingusamy sir. போட்ட காச எடுத்துட்டோம்னு சொல்றாங்க, எந்த அளவுக்கு உண்மைனு தெரியல.

வேட்டை”(Vettai) : நிறைய ஓட்டை

பிப்ரவரி:

கெத்து:

1)     “தோனி”. பிரகாஷ் ராஜ் நடித்து, தயாரித்து, இயக்கியத் திரைப்படம். கிட்டத்தட்ட “நண்பன்” சாயல் தெரிஞ்சாலும் ரொம்ப நாச்சுரலாக இருந்ததால் மக்கள் மனசில் இடம் பிடிச்சுருக்கு. பெற்றோர் பார்க்க வேண்டிய படம்.

தோனி” (Dhoni): சிக்ஸர் !

2)            “காதலில் சொதப்புவது எப்படி” பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த் நடித்து, தயாரித்த படம். கதைல லைட்டா குழப்புனாலும், படம் பார்க்க ஜாலியாக இருந்தது. முதல் படம் என்பதை நம்ப முடியாத மாதிரி பாலாஜி மோகன் இயக்கிருக்கார்.

காதலில் சொதப்புவது எப்படி?( (KSY) : குறும்படத்தை திரைப்படமாக்குவது இப்படி…

வெத்து:

“மெரினா” முதல் படத்துக்கே தேசிய விருது (“பசங்க”) பெற்ற இயக்குனர் பாண்டிராஜின் மூன்றாவது படைப்பு. விஜய் டிவி உருவாக்கிய சிவ கார்த்திகேயனின் முதல் படம் என்பதால், ஏக்கச்சக்க ஹைப். டாக்குமெண்டரி பீல் இருந்ததால் மனதிலும் ஒட்டவில்லை, தியேட்டரிலும் நிக்கவில்லை.

மெரினா”(Marina): சுனாமியாக எதிர்பார்த்து புஸ் ஆன மற்றொரு படம்.

மார்ச்:

கெத்து:

“அரவான்”. வசந்தபாலன் இயக்கத்தில், பசுபதி, ஆதி நடிப்பில் வெளியான படம். “சாகித்திய விருது” பெற்ற சு.வெங்கடேசன் அவர்களின் “காவல் கோட்டம்” என்ற புத்தகத்தில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட படம். நான் இந்த வருடத்தில் எதிர் பார்த்த படம். வித்தியாசமான முயற்சி, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செதுக்கிய படம், ஆனால், திரைக்கதையில் கோட்டை விட்டதால், Hat-trickஐ கோட்டை விட்டார் வசந்தபாலன்.

அரவான்” : மார்ச்சில் வந்த பார்க்கும்படியான ஒரே படம்.

வெத்து:

“3” ஒரே பாட்டால் உலகை உலுக்கிய படம். இப்போ ப்ளே லிஸ்ட்ல அந்த பாட்டு வந்தா 100ல 2 பேர் தான் கேப்போம். “மயக்கம் என்ன” பார்ட் 2 மாதிரி தான் இருந்தது (“மயக்கம் என்ன” படத்தை பார்த்து நிறைய பேர் மயங்கி விழுந்தது வேற கதை). எதுக்கு படத்துக்கு 3னு பெயர் வச்சாங்கனு தெரிஞ்சா ப்ளிஸ் கொஞ்சம் சொல்லுங்க. ரொமாண்டிக்கா ஆரம்பிச்ச படம், தட்டித் தடுமாறி, திக்கித் தேசமாறி, சைக்கோ படமாக முடியும் போது, “ஹய்யா படம் முடிஞ்சுது, ஜாலி !!”னு தியேட்டர் விட்டு ஆடியன்ஸ் ஓடி வர்றத பார்த்து எனக்கே லைட்டா கண் கலங்கிருச்சு.

கண்டிப்பா இந்த படத்தோட பாடல்கள் பத்தி சொல்லியே ஆகணும். “போ நீ போ“ங்கற காதல் தோல்வி பாட்டு சுவாமி மலை போகும் பொது பாடுறது, ‘Come on Girls’ பாட்டுல பப்ல தாலி கட்டுறதுலாம் ரொம்ப ஓவருங்க.

3”: Why this Kolaveri?

ஏப்ரல்:

கெத்து:

“ஒரு கல் ஒரு கண்ணாடி”. ராஜேஷ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த படம். 13 கோடி பட்ஜெட்டில் உருவான படம், 32 கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தின் ஹீரோ சந்தானம் நடிப்பில் பிச்சு உதறிருக்கார். தேவையில்லாமல் ஒரு லவ் ட்ராக், அதுக்கு ஹன்சிகா வேறு. தவிர்த்திருந்தால் பட்ஜெட்டாவது குறஞ்சுருக்கும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி” (OK OK): “ஒரு சந்தானம் 32 கோடி”

வெத்து:

மீதி எல்லாமே….

மே:

கெத்து:

“வழக்கு எண் 18/9”. பாலாஜி சக்திவேல் இயக்கிய மற்றொரு மிக அற்புதமான படம். பிரம்மாண்டமாக ஒன்றும் இல்லை, தெரிந்த நடிகர்கள் இல்லை, சாதாரண கேமரா தான், இருந்தும் படம் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இந்த படம் ஒரு திருப்புமுனை.  இது வரை பார்க்கலைனா, இப்போவே பாருங்க.

வழக்கு எண் 18/9” : லோ பட்ஜெட் பிரம்மாண்டம்.

வெத்து:

“ராட்டினம்”.சில பேருக்கு பிடித்தது, சில பேருக்கு சலித்தது.புது முகங்கள் வைத்து இயக்கிய தங்கசாமி , அந்த முகங்கள் பார்க்கும் படி இருக்கிறதா என்று கவனிக்க மறந்துவிட்டார். “காதல்” முதல் பல படங்களில் பார்த்து அலுத்த போன பழைய கதை.

இந்த படத்தை நான் பார்த்ததற்கு காரணம், கௌதம் மேனன் சொன்ன அந்த ஒரு வரி,

“படம் பிரமாதம். VTV துத்துக்குடில நடந்துருந்தா இப்படி தான் இருக்கும்.”

தயவு செஞ்சு சார், இனிமே உங்ககிட்ட இருந்து காதல் சமந்தமான படமும் வேணாம், டையலாக்கும் வேணாம்.

“ராட்டினம்” : தல சுத்துது.

ஜூன்:

கெத்து:

“தடையறத் தாக்க”. அருண் விஜய் நடித்த ஒரு உருப்படியான படம். நல்ல கதை. திரைக்கதை இன்னும் பலமாக இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.

தடையறத் தாக்க” : ஒரு தடவ பார்க்க.

வெத்து:

“சகுனி”. என்னமோ எதிர்பார்த்து எதுவுமே இல்லாமல் போன படம். ட்விஸ்ட் வைக்கலாம், ஆனால் கொஞ்சம் லாஜிக்காக இருக்கவேண்டும். லாஜிக்கை தேடவேண்டியதாயிற்று. வழக்கம் போல் சந்தானம் தான் ஒரே ஆறுதல். தேவையில்லாத காதல், பாடல், சண்டையை எத்தனை படத்தில் தான் பார்த்து விசில் அடிப்பது.

சகுனி” (Saguni) : ஒன்பதுல சனி.

ஜூலை:

கெத்து:

“நான் ஈ”. ராஜமௌலி இயக்கிய செம ஜாலியான படம். லாஜிக் இல்லைதான், ஆனால் இது போன்ற புனைக்கதைக்கு லாஜிக் தேவையில்லையே. மேஜிக் போதும். சரியான அளவில் காதல், சோகம், சந்தோஷம், கோபம் என்று கலந்து கொடுத்திருப்பதால், திரையரங்கம் விட்டு வெளிவரும் போது திகட்டாமல் இருக்கிறது. பாராட்டக்குரிய முயற்சி.

நான் ஈ” : ரசிக்க வைத்த பூச்சி

வெத்து:

“பில்லா 2”. நான் ‘தல‘ வெறியன் தான், இருந்தும் சில உண்மைகளை சொல்லித் தானே தீர வேண்டும். GODFATHER  மாதிரி எடுக்க வேண்டிய படத்தை, இப்படி GRANDFATHER மாதிரி எடுப்பார்கள் என்று அஜித்தே நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

பில்லா 2”: அட போங்க அண்ணாச்சி…..!

ஆகஸ்ட்:

கெத்து:

1)“நான்”. விஜய் அண்டோனி தயாரித்து, நடித்த படம். இவருல்லாம் ஹீரோவா என்று சிரித்தவருக்கெல்லாம் செருப்படி கொடுத்த படம். நல்ல நடிகரா இல்லாட்டியும் படத்துல நல்லா செட் ஆயிருக்காரு.

2)”அட்ட கத்தி”. படம் பேரு, போஸ்டர் எல்லாமே மொக்க, ஹீரோ வேற புதுசு, படம் மட்டும் எப்படி இருக்கும் என்று நினைத்து நிறைய பேர் நிராகரித்த படம். ஒடனே டவுன்லோட் செய்து பாருங்கள். சாதாரணமாக ஆரம்பித்து வித்தியாசமாக முடியும் படம். ஹீரோ தினேஷ் க்கு நல்ல ஒரு ஆரம்பம்.

அட்டகத்தி” : கொஞ்சம் கூர்மையான கத்தி..!

வெத்து:

“முகமூடி”. மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த படம். மிஸ்கின் இவ்ளோ கேவலமா எடுப்பார்னு யாருமே எதிர்பார்க்கவில்லை. கதைல தப்பா? திரைக்கதை தப்பா? கேமரா தப்பா?னு எதுல தப்புனே புரியலைங்க. நாட்சுரலாக படம் எடுத்துக் கொண்டிருந்த மிஸ்கினுக்கும் மசாலா ஆசை வந்துவிட்டது. வெளிநாட்டில் பாட்டு, பறந்து பறந்து பைட் என்று பேரரசு பெஸ்ட் பிரெண்ட் எடுத்தது போல் படம் இருக்கிறது. ஹீரோ ஜீவா நல்லா நடிச்சுருந்தாரு, வில்லன் நரேன் நல்லா காமெடி பண்ணிருந்தாரு.

முகமூடி” : காலி ஜாடி.

செப்டம்பர்:

கெத்து:

“சாட்டை”. அன்பழகன் இயக்கத்தில் சமுத்ரகனி நடித்த படம். நம் கல்வி முறையை பற்றி எடுத்திருக்கிறார். நல்ல கரு, ஆனால் மெசேஜ் ஸ்ட்ராங்காக இல்லை. புது டைரக்டர் என்பது முதல் சீனிலிருந்து கடைசி சீன் வரை தெரிகிறது. தம்பி இராமையா நடிப்பு பாராட்டக்குரியது. 1௦ வருடம் முன் இதே படம், ரஜினி நடித்து வந்திருந்தால் , படம் வசூல் சாதனை படைத்திருக்கும். கொஞ்சம் லேட்.

சாட்டை” : அடி சரியா விழல.

வெத்து:

“தாண்டவம்” . விஜய் இயக்கத்தில், விக்ரம் நடித்த படம். படத்தில் சொல்கின்ற அளவுக்கு இருந்த ஒரே ஒரே விஷயம் எமி ஜாக்சன். பொம்மை போல் அங்கும் இங்கும் வந்து போகிறார். அவருக்கும் கதை புரியவில்லை போல, நம்மை போலவே. வித்தியாசாமாக எடுக்க முயற்சித்து, அதற்கேற்ற முயற்சி முதலீடு செய்யாமல் இருந்ததாலே தோல்வி. “தங்க மகன்”இல் இது போன்ற தவறுகள் ஏற்படாது என்று நம்புவோம்.

தாண்டவம்”:  “காண்(டு)”டவம்

அக்டோபர்:

கெத்து:

“பிட்சா”. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து வெளியான வெற்றி படம். படத்தில் பாதி நேரம், நாமும் விஜய் சேதுபதியும் மட்டும் தான் இருப்போம். அதனாலோ எனவோ , கடைசியில் ட்விஸ்ட் வரும்போது “அட” என்று ஆச்சிரியபட்டவர்களை விட்ட, “அட” என்று ஏமாற்றம் அடைந்தவர்களே அதிகம். குறும்படம் போல் பீல் இருந்தாலும், நிச்சயமாக ஒரு நல்ல முயற்சி.

பிட்சா” : கார சாரமான ஸ்நாக்…!

வெத்து:

“மாற்றான்”. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்த ஆண்டில் ஹீரோ இரட்டை வேடத்தில் நடித்து வெளியான ஒரே படம். நன்றாக சவரம் செய்து கொண்டு தியேட்டர் சென்றால், படம் முடிந்து வெளியில் வரும் போது “நான் கடவுள்” ஆர்யா போல் தாடி மீசை வளர்ந்திருக்கும்.

மாற்றான்” (Maattrraan): தோற்றான்.

நவம்பர்:

கெத்து:

1)       “துப்பாக்கி” 7ஆம் அறிவு தோல்வியின் பிறகு, ஆக்க்ஷன் படமாக வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம். நல்ல கருத்தை, யாருக்கும் திகட்டாத முறையில் பிரஷ்ஷாக கொடுத்ததற்கு முருகதாசிருக்கு சல்யுட்.

2)       “நீர்ப்பறவை”. “தென்மேற்கு பருவக்காற்று” என்னும் தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் மற்றொரு நல்ல படம். மீனவர்கள் பற்றிய கூர் உணர்ச்சி கொண்ட கதையை அழகாக கையாண்டிருக்கும் இயக்குனரும், நடிக்காமல் படத்தில் வாழ்ந்திருக்கும் விஷ்ணு, சுனைனாவும் தான் வெற்றிக்கு காரணம்.

3)       “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”. பெயர் மட்டும் இல்லை, படமே படு வித்தியாசம் தான். உண்மை சம்பவமாம். உண்மையில் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி பார்த்தாலே உடல் சிலிக்கிறது.

“துப்பாக்கி”, “நீர்ப்பறவை”, “ந.கொ.ப.கா” : Hat-trick

வெத்து:

“போடா போடி”. சிம்பு, வரு இணைந்து நடித்த படம். இது வரை நான் பார்க்கவில்லை, பார்க்க தோணவேயில்லை. பார்க்கலாமா என்று என் room-mateயிடம் கேட்டதற்கு அவன் கூறிய பதில் , “ஆணியே புடுங்க வேணாம்” .

போடா போடி” : படம் பாக்கலாமா… வேணாமா…??

டிசம்பர்:

கெத்து:

“கும்கி” இன்னும் டிசம்பர் முடியவில்லை, இருந்தாலும் இந்த மாதத்தின் சிறந்த படம் இதுவாக தான் இருக்கும் என்பது என் கணிப்பு. கதையும் கேமராவும் பார்வையாளர்கள் மனதையும் விழியையும் கொள்ளையடிக்கிறது. தொடர்ந்து காதல் படங்களை இயக்கி வரும் பிரபு சாலமன், இனி கொஞ்சம் வித்தியாசமான படங்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும்.

வெத்து:

“நீதானே என் பொன்வசந்தம்”. ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.நான் ரொம்ப எதிர்பார்த்த படம். கொஞ்சமாச்சும் நல்லா இருந்துருக்கலாம். பேசாம போலீஸ் கதையாவே கௌதம் மேனன் எடுக்கலாம்.

நீதானே என் பொன்வசந்தம்”:  ____________ .

“என்னடா, ஓவரா எல்லா படத்தையும் கிண்டல் அடிக்கிறானே, ஒரு படம் எடுத்தா தானே தெரியும்”னு நிறைய பேர் நினைக்கலாம். இல்ல உங்களுக்கு பிடிச்ச படத்த நான் நல்லா இல்லனோ, பிடிக்காத படத்த சூப்பர்னோ சொல்லிருக்கலாம். அவங்களுக்கேல்லாம் நான் சொல்லிக்கிற ஒரே விஷயம், நான் நல்லா இருக்குனு சொன்னதுக்காக படம் 1௦௦ நாள் ஓடிராது. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ரசனை. ஸோ, என் மேல கோச்சுக்காம, தப்பு இருந்தா, உங்க வீட்டு மாப்பிளையா நினைச்சு மன்னிச்சுருங்க.

2011அ விட, 2012 தமிழ் சினிமாவிற்கு நிறைய நல்ல படங்களை தந்திருக்கிறது. பார்வையாளர்களும் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதனால் தானோ என்னோவோ, பெரிய டைரக்டர்கள் இயக்கிய படங்கள் தடமே இல்லாமல் காணாமல் போயின, பெரிய பட்ஜெட் படங்களும் சோபிக்கவில்லை.

பார்வையாளர்களுக்கு தீனி போட, இயக்குனர்கள் தலையே சொரியும் காலம் வந்துவிட்டது. மசாலா படங்களுக்கு கிராக்கி கம்மியாய் கொண்டே போகிறது. அதனால் இயக்குனர்கள், ஒன்று கதையை மாற்றவேண்டும், இல்லை ஊர்பக்கம் போய் பேரக்குழந்தைகளோடு செட்டில் ஆக வேண்டியது தான்.

சிறந்த சில விஷயங்கள்:

நடிகர் : விஜய் சேதுபதி (பிட்சா, நடுல கொஞ்சம் பக்கத்த காணோம்)

நடிகை : சுனைனா (நீர்ப்பறவை)

நகைச்சுவை நடிகர்:சந்தானம்(ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் பல)

குணச்சித்திர நடிகர்: தம்பி ராமையா(சாட்டை, கும்கி)

டைரக்டர் : பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)

கேமரா : சந்தோஷ் சிவன் (துப்பாக்கி)

திரைக்கதை : ஜீவா சங்கர் (நான்)

Special Effects: நான் ஈ

புது வரவு: தினேஷ் (அட்ட கத்தி)

இசை : இளையராஜா (நீதானே என் பொன்வசந்தம்)

அதிக லாபம் ஈட்டிய படம் : நான் ஈ

(பட்ஜெட் 3௦ கோடி, லாபம் 125 கோடி)

 

-சந்துரு