RSS Feed

சகுனி: சகுனம் சரி இல்லை

June 23, 2012 by Suraj

கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு சிறுத்தையிலிருந்து சகுனியாக மாறியிருக்கிறார் கார்த்தி. ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் சகுனி சனியாக மாறக் கூடிய அறிகுறிகள் படத்தில் நிறைய தென்படுகின்றன. அதைப் போக்கும் திருஷ்டிப் பரிகாரமாக, மக்களை காக்கும் மகேசனாக விளங்குகிறார் நமது காமெடி கிங் சந்தானம். வழக்கம் போல் முதல் பாதியை சந்தானத்தை வைத்தே ஓட்டி விடுகிறார்கள்.

Saguni Karthi

சரி கதைக்கு வருவோம். காரைக்குடியில் இருக்கும் கமலின் (கார்த்தி) பூர்வீகச் சொத்தை ரயில்வே contract காரணமாக அரசு கையகப் படுத்துகிறது. அதை மீட்பதற்காக அமைச்சரைப் பார்க்க சென்னை வருகிறார் கார்த்தி. அமைச்சரைப் பார்பதற்காக ஊரெல்லாம் சுற்றி யார்யார் காலில் எல்லாமோ விழுந்து அல்லோலப்படுகிறார். கடைசியாக எல்லாரும் கைவிட்ட நேரத்தில் ஆட்டோ ஓட்டும் ரஜினியைச் (சந்தானம்) சந்திக்கிறார். பந்தாவாக கோட் சூட் போட்டிருக்கும் கார்த்தியை பெரிய பணக்காரர் என்று எண்ணி தனது ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொள்கிறார் சந்தானம். பின்னர் தான் தெரிகிறது அவர் ஒரு care of platform என்பது. ஆட்டோவில் கார்த்தி தனது flash backஐ சந்தானத்துக்கு சொல்ல ஆரம்பிக்க அப்படியே ஜாலியாக பயணமாகிறது படம். முதல் பாதியில் காமெடி டிராக் ரஜினிக்கும் கமலுக்கும் (சந்தானம் & கார்த்தி) நடுவே நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்லதொரு விருந்தாகவும் அமைந்திருக்கிறது.

இரண்டாவது பாதியில் கார்த்தியின் அரசியல் பிரவேசம் ஆரம்பமாகிறது. நன்றியுணர்வை மறந்து, தனக்கு உதவாமல் விரட்டியடித்த முதலமைச்சர்(!) பிரகாஷ்ராஜை எதிர்த்து தனது சகுனித்தனமான தந்திரத்தாலும் சூழ்ச்சியினாலும் கார்த்தி வெற்றி பெறுவதே மீதிக் கதை. இவரது பழி வாங்கும் படலத்துக்காக சாமியார் வேடமேற்றிருக்கும் நாசர் மற்றும் இட்லிக்கடை ராதிகாவை ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ராதிகாவை சென்னை மாநகராட்சி மேயர் ஆக்குவதில் தொடங்கும் இந்த சகுனியின் ஆட்டம் பல சேட்டைகளைக் கடந்து climaxஇல் எதிர்கட்சித் தலைவராக ஆர்பரிக்கும் கோட்டா ஸ்ரீனிவாசராவை முதல்வர் ஆக்குவதில் முடிகிறது. தனி ஒரு ஆளாக இருந்து ஒரு மாநிலத்தின் அரசியலையே புரட்டிப் போடுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவுக்கே உரியதான கமர்சியல் கலை என்றே சொல்ல வேண்டும். அரசியல் ஒரு சாக்கடை தான் என்றாலும் அதை ஒரு கூவம் ரேஞ்சுக்கு படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். தற்கால அரசியல் சூழலையும் கிண்டலடித்திருக்கிறார். ஆங்காங்கே மக்களின் சிந்தனைப் பசிக்கு தீனி போடும் விதமாக பட்டைத் தீட்டப்பட்ட கூர்மையான அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றையெல்லாம் இதற்கு முன் பல படங்களில் பார்த்து விட்டபடியால் அந்த வசனங்கள் அனைத்தும் பெட்டிக்குள் அடங்கி விடுகின்றன.

பிரகாஷ் ராஜ் தனது கட்சியின் துணை முதல்வர் வேட்பாளாரான கிரணை(!) தானே வெடிகுண்டு வைத்து கொன்றுவிட்டு அதனால ஏற்படும் அனுதாப அலையினால் வெற்றி பெற எண்ணுவது; இறந்து விட்டார் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது கிரண் மீண்டும் உயிரோடு வருவது என்பதெல்லாம் படு மொக்கையான ட்விஸ்டுகள். கிரண் செல்லும் காரில் வெடிகுண்டு இருப்பதை ஹீரோ கார்த்தி எப்படி அறிந்து கொண்டார் என்பது இயக்குனருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை. தேவையே இல்லாத ஒரு சண்டைக் கட்சி வேறு திணிக்கப் பட்டுள்ளது.

ராதிகா, ரோஜா, கிரண், அனுஷ்கா, ஆண்ட்ரியா, ப்ரணீத்தா என்று அந்த காலத்து நாயகிகளில் இருந்து இந்த காலத்து நாயகிகள் வரை ஒரு நடிகைகள் பட்டாளத்தையே களம் இறக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர் தயாள். கார்த்தியின் ஜோடியாக வரும் ப்ரணீத்தாவிடம் நான்கு நாட்கள் மட்டுமே கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போலும். நான்கைந்து  காட்சிகள், இரண்டு பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். கார்த்தியின் அத்தை பாத்திரத்துக்கு ரோஜா மிகவும் பொருந்தி இருக்கிறார். இரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் திரையரங்கில் (புகை)ச்சலையே ஏற்படுத்துகின்றன. பின்னணி இசையும் எடுபடவில்லை. ஜி.வி. பிரகாஷுக்கு தயாரிப்பாளர் சம்பள பாக்கி எதுவும் வைத்து விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. கார்த்தி நடனத்தில் அவரது அண்ணனை விஞ்சிவிடுவார் போலிருக்கிறது. கண்டிப்பாக அவரது நடனத் திறமையை மேம்படுத்திக் கொள்ளவது நல்லது. தனது முதல் இரண்டு படங்களைத் தவிர தொடர்ந்து கமர்சியல் மசாலா படங்களிலேயே நடித்து வரும் கார்த்தி தனது பாதையை மாற்றிக்கொள்ளாவிட்டால் பாதாளத்துக்குச் செல்ல நேரிடும் என்பதை அறிந்து வருங்காலத்தில் படத் தேர்வினை ஜாக்கிரதையாக அமைத்துக் கொள்ளவேண்டும்.

சகுனி – வேலை எதுவுமின்றி மிகவும் வெட்டியாக இருந்தீர்களேயானால் திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம். சகுனிக்கு சகுனம் சரி இல்லை.


Mass★★★★☆Mokka