RSS Feed

பீட்சா: சுடச்சுட

October 22, 2012 by Suraj

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியிருக்கும் மற்றுமொரு புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் முதல் திரைப்படம். இவரது குறும்படங்கள் Youtubeஇல் மிகவும் பிரசித்தி பெற்றவை. படத்திற்கு வழக்கத்துக்கு மாறாக பீட்சா என்று பெயரிட்டதிலிருந்தே நம்மை கவர்ந்து விடுகிறார் இயக்குனர். குறும்படங்கள் எடுப்பதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் இந்த படத்தில் மிகவும் கைகொடுத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியையும் நேர்த்தியாக படம் பிடிக்க மெனக்கெட்டிருப்பதை திரையில் காண முடிகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு மட்டுமே கதாபாத்திரங்களைப் படைத்து (இதுவே படத்தின் ப்ளஸ்) சாமர்த்தியமான திரைக்கதை அமைத்து திடுக்கிடும் திருப்பங்களுடன் திறம்பட படத்தை நகர்த்தியுள்ளார்.

"Pizza Review"

இயக்குனருக்கு சமமாக ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் , படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் போட்டி போட்டு உழைத்துள்ளார்கள். குறிப்பாக அந்த திகில் பங்களாவில் ஒவ்வொரு பிரேமிலும் பயத்தை படம் பிடித்து காட்டியிருக்கிறார் கோபி அமர்நாத். ஒரே ஒரு டார்ச் லைட்டையும் பொம்மையையும் வைத்து பயம் காட்டி ரசிகர்களின் adrenalineஐ பொங்க வைத்துவிடுகிறார். இவரது கேமராவிற்கு இணையாக சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை ரசிகர்களின் நெஞ்சில் பயத்தை விதைக்கிறது. குறிப்பாக அந்த கைபேசியின் ரிங் டோன். ஆரண்ய காண்டத்திற்குப் பிறகு பின்னணி இசை இப்படத்தில் கண்டிப்பாக பேசப்படும். கைபேசியின் ரிங்டோனுக்காக பிரத்யேகமாக ஒரு பாடலை கம்போஸ் செய்து புதுமையை புகுத்தியிருக்கிறார். அந்தப் பாடலை படத்தின் இறுதியில் பயன்படுத்தியது இயக்குனரின் brilliance. நிஜ வாழ்கையில் பீட்சா delivery செய்யும் ஆசாமி எவரேனும் படத்தைப் பார்த்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அல்லல் படப் போவது உறுதி.

படத்தின் நாயகன் விஜய் சேதுபதி. மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். இவரது முந்தைய படங்களான தென்மேற்குப் பருவக்காற்று, சுந்தர பாண்டியன் ஆகியவை பெரிதளவு பேசப்பட்டாலும் விஜய் சேதுபதி எனும் நடிகனுக்கு பீட்சா தான் பிரேக். இவரது கண்களால் காதல் செய்யவும் முடிகிறது, அதே கண்களில் கலவரத்தைக் காட்டி ரசிகர்களை கதிகலங்க வைக்கவும் முடிகிறது. இவரது அடுத்த படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’ ஏற்கனவே கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் கவனமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவர் நடித்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஓர் உயரிய இடத்தை பிடிப்பது நிச்சயம். விஜய் சேதுபதி பீட்சா டெலிவரி பாய்க்கான perfect தேர்வு. இவர் மட்டுமல்ல ஆடுகளம் நரேனில் இருந்து வீர சந்தானம் வரை படத்தின் அனைத்து நடிகர்களையும் மிகச் சரியாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். ரம்யா நம்பீசனுக்கு படத்தில் screen space கம்மி என்றாலும் கதையில் இவரது impact மிக அதிகம். அளவாக நடித்திருக்கிறார். அதிகமாக காதல் செய்திருக்கிறார். முகப்பருக்கள் இவரது அழகுக்கு அழகு சேர்க்கின்றன!

திரையில் ரஜினிகாந்த் சில முறை தோன்றுகிறார். முதல் முறை வழக்கம் போல விசில் சத்தத்தில் திரையரங்கு கிழிந்தது. அடுத்தடுத்த முறைகளில் அதை விட அதிகமாக விசில் சப்தமும் அலறல்களும் இருந்தன. ஆனால் இப்பொழுது ரஜினிக்காக அல்ல. அடுத்தது என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பிலும் ஆவலிலும். படம் ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துரைப்பதற்கு இந்த ஒரு நிகழ்வே போதுமானது. ஒரு பெரிய அந்தஸ்து நடிகர் இல்லாத படத்திற்கு படம் நெடுக ஆங்காங்கே கைத்தட்டல்களும் பாராட்டுகளும் கிடைப்பது மிக அரிது. அந்த அறிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். படத்தில் ஆங்காங்கே பல ஆங்கில மற்றும் ஐரோப்பிய சாயல்கள் தெரிந்தாலும் அதற்கும் படத்தின் இரண்டாவது பாதியில் logic விளக்கம் அளித்து விடுகிறார் இயக்குனர். படத்தின் முடிவை ஒரு குறும்படம் போல் அமைத்திருப்பதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம் (அதிகமாக குறும்படங்கள் எடுத்ததின் தாக்கமாக இருக்கலாம்!). ஆனால் அதன் காரணமாக படத்தின் தரமும் வெற்றியும் எந்த விதத்திலும் குறைந்து விட போவதில்லை.

இந்த வருடம் பெரிய ஹீரோக்கள் படங்கள் தொடர்ந்து ஏமாற்றி வர பீட்சா போன்ற அறிமுக இயக்குனர்களின் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புத்துணர்வை அளிக்கின்றன. எந்த வித மசாலாவும் இல்லாமல் ரசிகர்களுக்கு fresh ஆக பீட்சாவை deliver செய்திருக்கும் fresh டீமுக்கு வாழ்த்துக்கள்.

[rating: .5/5]


1 Comment »

  1. amas32 says:

    Nice review. I don’t like scary movies, so did not see this. Good your review gave taste of the movie :-))

    amas32

Leave a Reply

Your email address will not be published.