RSS Feed

மாற்றான் – தடுமாற்றம்

October 14, 2012 by Suraj

அயன் மெகா வெற்றிக்கு பிறகு மீண்டும் கே.வி. ஆனந்த-சூர்யா கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம். ஒரு சமூகப் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு தனக்கே உரிய பாணியில் காதல், humour  action, pub  பாடல்கள் என திரைக்கதையைப்  பின்னி  படத்தை ஒரு  கமர்சியல் கலவையாக வழங்கியிருக்கிறார் ஆனந்த. படத்தின் நாயகர்களாக ஓட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகளான (conjoined twins) சூர்யாவின் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார் இயக்குனர். போராட்ட குணத்துடன் சமூக அக்கறையும் கொண்ட விமலனாகவும் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்ற சுயநலத்துடன் வாழும் அகிலனாகவும் இரு வேறு முரணான பாத்திரங்களை ஏற்று கச்சிதமாக நடித்திருக்கிறார் சூர்யா.

இரட்டையர்களை ஓட்டிப் பிறந்தவர்களைப் போல VFX  மூலமாக தத்ரூபமாக காட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் VFX மற்றும் Graphics இன் வளர்ச்சிக்கு மாற்றான் மற்றுமோர் உதாரணம். இரட்டைக் கதிரே, தீயே தீயே பாடல் காட்சிகளிலும் முதல் பாதியின் முடிவில் வரும் சண்டை காட்சியிலும் ஸ்ரீனிவாசன் மோகன் மற்றும் அவரது சகாக்களின் உழைப்பைத் திரையில் காண முடிகிறது. VFXஇல்  மெனக்கெட்டிருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக அவ்வளவு நீளமான சண்டை தேவைதானா எனக் கேட்கத் தோன்றுகிறது! கொஞ்சம் வெட்டியிருக்கலாம். எதிர்பாராத திருப்பங்கள், ஆடல் பாடல் என்று முதல் பாதி ஜாலியாக முடிகிறது. தனது சகோதரன் விமலன் மற்றும் உக்ரைன் பத்திரிகையாளர் வோல்காவின் கொலையின் பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகளை அகிலன் சூர்யா அவிழ்ப்பதை இரண்டாம் பாதியில்  சுவாரசியமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். சோவியத் உக்ரைனில் சூர்யா செய்யும் சாகசங்கள் யாவும் படத்தின் வேகத்துக்கு உதவினாலும் நம்பும்படியாக இல்லை. ராணுவத்தின் பிடியிலிருந்து ஒரு truckஇல் அசால்டாக தப்பிச்செல்வது எல்லாம் உட்டாலக்கடி. 1992 பார்சிலோனா ஒலிம்பிக் விளையாட்டையும் நம்மூர் உணவுக்கலப்படத்தையும் லிங்க் செய்தது ஆனந்த் மற்றும் சுபாவின் கற்பனை திறனின் உச்சபட்சம். தனது தொழிலையும் கௌரவத்தையும் காப்பதற்காக தனது மகனையே யாரேனும் கொலை செய்ய துணிவார்களா என்று ரசிகர்களிடம் எழும் logic கேள்விக்கு படத்தின் இறுதிக்காட்சியில் விடையளித்திருக்கிறார்  இயக்குனர்.

காஜல் அகர்வால் படம் நெடுக நாயகனுடன் வலம் வருகிறார். தனது படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் வெகு சில இயக்குனர்களில் கே.வி.ஆனந்தும் ஒருவர். அதேபோல தனது படங்களில் ஏதேனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை சாகடித்து, செண்டிமெண்டை உருவாக்கி அடுத்த பத்து நிமிடத்துக்குள் ஒரு சோகமான பாட்டை வைத்து விடும் தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட மரபைப் பின்பற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வில்லனின் அடியாள் ரயிலில் அடிபட்டு சாவதை காமிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. தொடர்ந்து  இரண்டு science fiction வகையறாப் படங்களில் நடித்துள்ளார் சூர்யா. ஏழாம் அறிவைக் காட்டிலும் genetic  engineering   தொழில்நுட்பத்தை இப்படத்தில் மிக லாவகமாக கையாண்டுள்ளார் இயக்குனர். படத்தில் சொல்வது போல பத்து பேரின்  genes மற்றும் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையை உருவாக்கும் baby designing செயல்முறை விஞ்ஞானத்தால் சாத்தியமா என்று தெரியவில்லை.

உக்ரேனிய ராணுவத்திடம் இருந்து தப்பிக்கும்போது டப்பாங்குத்தை BGM ஆக போடும் தனித்திறமை படைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் மட்டுமே. சுமாரான பாடல்களை சௌந்தர் ராஜனின் கேமரா மிகவும் அழகாகவும் ரம்ம்மியமாகவும் படமாக்கியிருக்கிறது. “நாணி கோணி” பாடலில் நார்வேயின் அழகை நிர்வாணமாக்கிக் காட்டியிருக்கிறார். அந்தோனியின் எடிட்டிங் வழக்கம் போல் கனக்கச்சிதம். படத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தின் நீளம். நீண்டு கொண்டே செல்லும் இரண்டாவது பாதியின் நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும். ஆக மொத்தத்தில் விஞ்ஞானம், வரலாறு, உணவுக்கலப்ப டம் என்ற வெவ்வேறு புள்ளிகளை இணைத்து social message  உடன்  ஒரு commercial entertainer  படைக்க முனைந்திருக்கிறார் ஆனந்த்.


Mass★★½☆☆Mokka