RSS Feed

நண்பன்: Remake ஆக இருந்தாலும் நடிகர்களின் சட்டை நிறத்தையாவது மாற்றியிருக்கலாம் ஷங்கர்

January 15, 2012 by Suraj

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பாக நண்பர்களுடன் திருச்சி காவேரி திரையரங்கில் “3 idiots ” திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். ஓரளவுக்கே ஹிந்தி தெரிந்த என்னிடத்தில் அந்த படம் மொழி என்னும் வரம்பயும் மீறி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. படத்தை பார்த்த அடுத்த சில நாட்களுக்கு ஒவ்வொரு நொடியும் அந்த படமும் அதில் வரும் கதாபாத்திரங்களும் என் நினைவலைகளில் சுழன்று கொண்டிருந்தன. படம் பார்த்து விட்டு வெளியே வரும்பொழுது நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் “Don’t miss 3 idiots. It’s a once in a lifetime movie” என குறுஞ்செய்தி (sms) அனுப்பியது மட்டுமில்லாமல் கண்ணில் படுபவர்களை எல்லாம் அந்த படத்தை சென்று பார்க்குமாறு நச்சரிதுக்கொண்டிருந்தேன். இது போன்று ஒரு படம் தமிழில் வராதா என ஏங்கியும் கூட இருக்கிறேன்.

Nanban Review

இன்று எனது ஏக்கம் இயக்குனர் ஷங்கரின் நண்பன் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஷங்கரை தவிர யாராலும் இந்த படத்தை இவ்வளவு கச்சிதமாக remake செய்திருக்க முடியாது. ஹிந்தி படத்தின் திரைக்கதையை சிறிதும் மாற்றவில்லை. இதுவே படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் சொல்லலாம். கதை அப்படியே “3 idiots” தான் என்பதாலும் பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும் என்பதாலும் அதை பற்றி பெரிதாக பேச வேண்டியது இல்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் ரசிக்க வைக்கிறார். ஆம், விஜய் (நன்றாக) நடித்திருக்கிறார். படம் அறிவித்தவுடன் “ஆமிர் கான் கதாபாத்திரத்தில் விஜயா!” என்று ஏளனமாக பேசினவர்கள் கூட இன்று வாயடைத்து போயிருக்கிறார்கள். ஓரிரு இடங்களில் ஆமிர் கான் போல imitate செய்ய முயற்சி செய்திருந்தாலும் ஏராளமான காட்சிகளில் தனக்கு என்ன வருமோ அது போலவே நடித்து நம் மனதைக் கவருகிறார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி, துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே வரிசையில் இப்படத்துக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு. படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகிய மூவருக்கும் நடுவே உள்ள chemistry சிறப்பாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் முவரும் கல்லூரி மாணவர்களை போன்ற துடிப்புடன் ஆடியிருக்கிரார்கள். இதுவரை ரவுடிகளையும் வில்லன்களையும் மட்டுமே அடித்து துவம்சம் செய்த விஜய் இந்த படத்தில் சத்யராஜ் முதல் அனுயா வரை அனைவரிடமும் அடிவாங்குகிறார். பஞ்சவன் பரிவேந்தனாக விஜயும், சேவர்கொடி செந்திலாக ஜீவாவும், வெங்கட்ராமகிரிஷ்ணனாக ஸ்ரீகாந்தும் மிக சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

படத்தில் இரண்டாவது ஹீரோ ஜீவா என்றே சொல்லலாம். பல இடங்களில் படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார். ஹிந்தி படத்தில் இவரது பாத்திரத்தில் நடித்த ஷர்மான் ஜோஷியே படத்தை பார்த்து விட்டு இவரது நடிப்பை பாராட்டி இருக்கிறார். மருத்துவமனை காட்சிகளிலும் Campus Interview காட்சியிலும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி நம் மனதை நெகிழவைக்கிறார். காமெடியிலும் கலக்குகிறார். இந்த பாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது (நல்லவேளை). ஸ்ரீகாந்த் தனது பாத்திரத்தை அறிந்து தெளிவாக நடித்திருக்கிறார். இப்பாத்திரம் வினய், நகுல், உதயநிதி என்று சுத்தி கடைசியில் ஸ்ரீகாந்திடம் வந்தது. ஓரிரு இடங்களில் தடுமாறினாலும் மாதவனுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். Wildlife photographer ஆக வேண்டும் என்று அவரது அப்பாவிடம் விருப்பத்தை தெரிவிக்கும் காட்சியில் அவரது அப்பாவின் கண்களில் மட்டும் அல்ல நமது கண்களிலும் சிறு துளி கண்ணீராவது வர வைத்து விடுகிறார்.

இலியானா அளவாக நடித்திருக்கிறார். தாராளமாக பாடல் காட்சிகளில் ஆடை அணிந்திருக்கிறார். இவர் பாடல்களில் அவரது மெலிதான இடையை வளைகொடுத்து ஆட்டும்போது திரையரங்குகளில் நமது இளைஞர்களின் விசில் பறக்கிறது. ஏன் விஜயின் ஓபனிங் சீனுக்கு கூட இவ்வளவு விசில் இல்லை. விஜயுடன் காதல் செய்கிறார், ஆடுகிறார், கூத்தடிக்கிறார் ஆனால் என்னவோ கரீனா கபூர் அளவுக்கு நம் மனதை கவரவில்லை. B மற்றும் C centre ரசிகர்களை குறி வைத்தே “இருக்கானா” பாட்டைச்சேர்த்திருக்கிறார் ஷங்கர்.

யாருமே எதிர்பார்க்காதவாறு சத்யன் silencer/ஸ்ரீவத்சன் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். இப்படம் கண்டிப்பாக அவருக்கு ஒரு மைல் கல் தான். இவரது ‘கற்பித்தல்-கற்பழித்தல்’ பேச்சில் திரை அரங்கே வெடித்து சிதறுகிறது. இக்காட்சியை தமிழுக்கு ஏற்றவாறு அருமையாக மாற்றியிருக்கிறார் மதன் கார்கி. “ரெண்டு காலும் உடஞ்சதுக்கு பின்ன தான் சொந்த காலுலையே நிக்க கத்துக்கிட்டேன்”, “திருக்குறள் மாதிரி flash backஐ முடிச்சிட்டான் பாரு”, “என்ன ஊரு இது, ரெண்டு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரமாட்டேங்குது 5 நிமிஷத்துல pizza வந்துருது” போன்ற வசனங்களில் பளிச்சென தெரிகிறார் அவர். சுஜாதா இல்லாத குறையை பல இடங்களில் போக்கி இருக்கிறார். அஸ்கா லஸ்கா பாடலில் யாரும் அறிந்திராத நாடிமானி (stethoscope) போன்ற தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.

Viru(mandi) S(anthanam) ஆக சத்யராஜ் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரது 20 ஆண்டு கால அனுபவத்தைத் திரையில் பார்க்கலாம். ஒரு கறாரான ஆசிரியருக்கான அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்துகிறார். ஆனால் விஜயை அடிக்கும் காட்சியில் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்யபடுகிறார். மனோபாலா, அனுயா, SJ சூர்யா விஜய் வசந்த் என அனைவரும் கொடுத்த காசுக்கு மேலேயே நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரமஹம்சவின் ஒளிப்பதிவு ஊட்டி, தனுஷ்கோடி, சென்னை, கோயம்புத்தூர் என தமிழகத்தின் பல பகுதிகளை அழகாக காட்டியிருக்கிறது. இசை ஹாரிஸ் செராக்ஸ் (ஜெயராஜ்) – சென்னை சூப்பர் கிங்க்ஸ் பாடல், வெண்ணிலவே பாடல், VTV பாடல் என பல பாடல்களை உல்டா செய்து, டிங்கரிங் வேலைபார்த்து 3 பாடல்களை இயற்றியிருக்கிறார். மற்ற பாடல்களை பற்றி தெரியவில்லை. இருந்தாலும் படத்துடன் பாடல்கள் சிறப்பாகவே வந்துள்ளன. பின்னணி இசையில் சிறிது சொதப்பியிருக்கிறார்.

என்னதான் remake ஆக இருந்தாலும் நடிகர்களின் சட்டை நிறத்தையாவது மாற்றியிருக்கலாம் ஷங்கர். “இதெல்லாம் ஷங்கர் பட கிராபிக்ஸ்ல தான் வரும்” என்று வசனம் எழுதியும், அஸ்கா லஸ்கா பாடலை தனது முந்தைய படங்களின் பாடல்களை போன்றே படமாக்கியும் அவரது படங்களை அவரே கிண்டலடிதிருக்கிறார் (spoof). இன்றைய காலகட்டத்தில் ஹாலிவுடில் இருந்து அப்படியே ஈ-அடிச்சான் காப்பி அடித்து படத்தை எடுத்து விட்டு கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துக்கும் தனது பெயரையே போட்டுக்கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில் முறையாக rights வாங்கி Title card இல் Direction – Shankar என்று மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஷங்கர் கண்டிப்பாக பாராட்டுக்கு உரியவர் தான்.

நீங்கள் 3 idiots பார்த்திருந்தாலும் சரி பார்க்கவிட்டாலும் சரி உங்களை கண்டிப்பாக சிரித்து மகிழ்விப்பான் இந்த நண்பன். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய அருமையான திரைப்படம்.

P.S.: படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு விஜய் ரசிகர்-“என்னதான் இருந்தாலும் படத்துல ஒரு ஒபனிங் சாங் இல்ல, fight இல்ல, விஜய் படம் மாதிரியே இல்லடா”. விஜய் உருப்படனும்னு நெனச்சாலும் இவங்க விடமாட்டாங்க போலிருக்கே!

[rating:1]


7 Comments »

  1. Anandan says:

    super da suraj..! Therikka vidu..!

  2. Balaraman says:

    நான் இனிமே தான் ‘நண்பன்’ படம் பாக்கப் போறேன். ‘3 idiots’ படமும் பாத்ததில்ல…

    இந்த விமர்சனம் “நண்பன்” படம் பாக்கத் தூண்டுது! நிறைகுறைகள நல்லா சுட்டியிருக்கீங்க!

    //ஹாரிஸ் செராக்ஸ்(ஜெயராஜ்)// நல்ல நகைச்சுவை! ;>

  3. Unique Artists says:

    உங்கள் திறமைக்கு நாம் முகவரி தருகின்றோம். இன்றே இணையுங்கள் http://www.tbozzmedia.com
    மின்னஞ்சல் முகவரி: info@tbozzmedia.com அல்லது unique.artists@hotmail.com

  4. Sundarjto says:

    suraj neeya ezhuthirukke

  5. […] “நண்பன்” (Nanban): காப்பி அடிச்சாலும் நண்பன், நண்பன் தான். […]

Leave a Reply

Your email address will not be published.