நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியிருக்கும் மற்றுமொரு புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் முதல் திரைப்படம். இவரது குறும்படங்கள் Youtubeஇல் மிகவும் பிரசித்தி பெற்றவை. படத்திற்கு வழக்கத்துக்கு மாறாக பீட்சா என்று பெயரிட்டதிலிருந்தே நம்மை கவர்ந்து விடுகிறார் இயக்குனர். குறும்படங்கள் எடுப்பதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் இந்த படத்தில் மிகவும் கைகொடுத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியையும் நேர்த்தியாக படம் பிடிக்க மெனக்கெட்டிருப்பதை திரையில் காண முடிகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு மட்டுமே கதாபாத்திரங்களைப் படைத்து (இதுவே படத்தின் ப்ளஸ்) சாமர்த்தியமான திரைக்கதை அமைத்து திடுக்கிடும் திருப்பங்களுடன் திறம்பட படத்தை நகர்த்தியுள்ளார்.


